tamilnadu

img

வரி வருவாய் இலக்கில் ரூ.2.5 லட்சம் கோடி அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு - முன்னாள் நிதிச் செயலர் எச்சரிக்கை

நடப்பு 2019-20 நிதியாண்டில், வரி வருவாய் இலக்கில் ரூ.2.5 லட்சம் கோடி அளவுக்கு பற்றாக்குறை அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக முன்னாள் நிதிச் செயலர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக மத்திய அரசின் நடப்பு வருவாய் கணக்கு மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. இந்த பற்றாக்குறையை ஈடுசெய்ய மோடி அரசு திணறி வருகின்றது. இந்நிலையில், நடப்பு 2019-20 நிதியாண்டில், வரி வருவாய் இலக்கில் ரூ.2.5 லட்சம் கோடி அளவுக்கு பற்றாக்குறை அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக முன்னாள் நிதிச் செயலர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கார்க் கூறுகையில், ”நடப்பு நிதியாண்டு ஒரு செயலற்ற ஆண்டாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. நடப்பு நிதியாண்டிற்கான வரி வசூல் 24.59 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என பட்ஜெட்டில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதில் 8.09 லட்சம் கோடி ரூபாய் பங்களிப்பு மாநில அரசுகளுடையது. நிகர அளவில் மத்திய அரசின் வரி வருவாய் 16.50 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்றும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கார்ப்பரேட் வரி, உற்பத்தி வரி, சுங்க வரி வசூலில் பெருத்த பின்னடைவு ஏற்படலாம். கார்ப்பரேட் வரி 8 சதவீதமும், உற்பத்தி வரி 5 சதவீதமும், சுங்க வரியானது 10 சதவீதமும் குறையலாம் என்றும், ஒட்டுமொத்த அளவில் மத்திய அரசின் மொத்த வரி வருவாய் 3.5 முதல் 3.75 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வரி வசூலில் பற்றாக்குறை ஏற்படும் இதே நேரத்தில், நிதி பற்றாக்குறை இலக்கை 0.5 முதல் 0.7 சதவீதம் வரை திருத்தம் செய்வதை தவிர்க்க முடியாத ஒன்றாக தோன்றுகிறது. எனவே, வரி வருவாய் மிக மோசமான நிலையில் உள்ள இந்த நேரத்தில், வரி கட்டமைப்பில் சரியான சீர்திருத்தங்களை செய்வது சரியானதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

;